குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை திருத்தி தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைக்கு லஞ்சம் பெற்று அனுமதியளித்ததாக முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த நவம்பரில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் இருந்த பிழைகளை  திருத்தி தாக்கல் செய்ய அவகாசம் அளித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதை திருத்தம் செய்தும், சாட்சிகளுடைய வாக்குமூலங்கள், குற்றம் சாட்டபட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு பெறப்பட்ட அனுமதி உள்ளிட்ட  விவரங்களையும் இணைத்து முழுமையாக தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிபரவரி  6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: