எட்டயபுரம் பகுதியில் அரசு முத்திரையுடன் போலி சிட்டா விநியோகிக்கும் கும்பல்: உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

எட்டயபுரம்:  எட்டயபுரத்தில் அரசு முத்திரையுடன் நத்தம் நிலவரி சிட்டா போலியாக தயாரித்து விநியோகிக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போலிசிட்டா மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்துகளை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். விவசாய நிலங்களுக்கு தாலுகா அலுவலகம் மூலம் அரசு கணினி பட்டா வழங்கப்படுகிறது. விவசாய நிலத்தை விற்பனை செய்ய, வங்கியில் கடன் பெற, கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்பெற, பயிர் காப்பீடு செய்ய உள்ளிட்ட பிற தேவைகளுக்காக நிலத்தின் உரிமையாளர்கள் பொது சேவை மையங்களில் நிலத்தின் பட்டா எண் மற்றும் சர்வே எண்ணை கூறி கணினி பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

அன்றைய தேதியில் சொத்து யாருடைய பெயரில் உள்ளதோ? அதன்படி இந்த பட்டா வழங்கப்படுகிறது. அதேவேளையில் எட்டயபுரம் நகரம், கிராமங்களில் ஆரம்ப கால வீட்டு மனைகளுக்கு நத்தம் நிலவரி திட்ட தூய சிட்டா என வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியரால் தயாரிக்கப்பட்டு அரசு சீல், தலைமையிடத்து வட்டாட்சியர் கையொப்பம் மற்றும் சீலுடன் கையால் எழுதப்பட்டு வழங்கப்படுகிறது.

பட்டா போல் சிட்டா கணினி மயமாக்கப்படவில்லை. நத்தம் வீட்டுமனைகளை விற்பனை செய்யவும், சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை பத்திரப்பதிவு செய்வதற்கும் நத்தம் சிட்டா கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சிட்டா பெற்று அதன் அடிப்படையில் நிலத்தை விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் எட்டயபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போலியாக சிட்டா தயாரித்து அரசு சீல் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சீல் போலியாக வைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி, ஏற்கனவே எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணிபுரிந்த அதிகாரியின் கையொப்பத்தை அன்றைய தேதியுடன் போலியாக போட்டு சில தனி நபர்களால் போலி சிட்டா வழங்கப்படுகிறது. இதனை கொண்டு எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்யப்படுகிறது. போலி கும்பலால் சிட்டா தயாரிக்கப்பட்டு சொத்தும் விற்பனையாகி காலம் கடந்த பிறகுதான் தங்கள் சொத்து விற்பனையான விவரமே,  இட உரிமையாளருக்கு தெரிய வருகிறது.

அவர் தாலுகா அலுவலகத்திலும் சார்பதிவாளர் அலுவலகத்திலும் தங்கள் சொத்தை மீட்கக் கோரி மனு கொடுத்தால் இந்த சான்றிதழ் நாங்கள் வழங்கவில்லை, இது போலியானது என தாலுகா அலுவலக அதிகாரிகளும், இந்த சொத்ைத நான் பத்திரப்பதிவு செய்யவில்லை, எனக்கு முன் இருந்தவர் பதிவு செய்தார் என சார்பதிவாளரும் பரஸ்பரம் காரணம் கூறி விடுகின்றனர். இதனால் வழிதெரியாமல் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பின்னர் நீதிமன்றம் சென்று சொத்தை மீட்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே எட்டயபுரம் பகுதியில் பூர்வீக சொத்துகளை குறிவைத்து சில கும்பல் போலி சிட்டா தயாரித்து இட உரிமையாளருக்கு தெரியாமல் சொத்தை விற்பனை செய்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்த போலி சிட்டா வழங்கும் நபர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் இடம்பெறும் கையெழுத்து அதிகாரியும் வேறு ஊரில் பணிபுரிவதால் அவரும் கண்டுகொள்வதில்லை.  நடப்பு தேதியில் பணிபுரியும் அதிகாரியும் எனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை  என ஒதுங்கி விடுவதால் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே சொத்தை மீட்க அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே எட்டயபுரம் பகுதியில் அரசு போலி முத்திரை, தலைமையிடத்து துணை  வட்டாட்சியர் முத்திரையோடு போலி சிட்டா தயாரிக்கும் கும்பலை கண்டுபிடித்து  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தயாரிக்கும் கும்பல் மீது போலீசில் வருவாய் துறையினர், பதிவுத் துறையினர் போலீசில் புகார் அளித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்பதிவாளர் உறுதி செய்வாரா?

கணினி பட்டா இல்லாத நத்தம்சிட்டா மூலம் வீட்டுமனைகள் பத்திரப்பதிவிற்கு  வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் தலைமையிடத்து துணை  வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சிட்டா உண்மையானது தானா என உறுதி செய்த பிறகே  பத்திரப்பதிவு செய்ய வேண்டும். ஏழை விவசாயிகள், குடும்ப வறுமை காரணமாக பூர்வீக சொத்தை விற்பனை செய்ய சென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில்  மூலப்பத்திரம், இசி என பல விதங்களிலும் உறுதி செய்த பிறகே பத்திரம் பதிவு  செய்யப்படுகிறது. ஆனால் நீதிமன்ற தாக்கலுக்கு ஏற்புடையதல்ல என அதிகாரியால்  எழுதப்பட்டுள்ள ஆவணத்தை எந்தவித விசாரணையும் இன்றி பத்திரப்பதிவு செய்வதாக  கூறப்படுகிறது. எனவே வரும் காலங்களில் பொதுமக்கள், விவசாயிகளின் சொத்துகளை  பாதுகாக்கும் வகையில் சார்பதிவாளர்கள் சிட்டா குறித்து தீர விசாரித்து  பத்திரப்பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அசல்- போலி வேறுபாடு

அசல் சிட்டாவில் கிராம எண், நத்தம் பட்டா எண், புல எண், உட்பிரிவு நில  உரிமையாளர் பெயர் கையால் எழுதப்பட்டு, மேற்படி நகல்எண், நகல் தயாரித்தவர்,  நகல் ஒப்பிட்டவர், மொத்த வார்த்தைகள், மொத்தப்பக்கங்கள் ஆகியவை கொண்ட சீல்  அடிக்கப்பட்டு அந்த விபரங்கள் கையால் எழுதப்பட்டுள்ளது. மேலும் பித்தளையால்  செய்யப்பட்ட அரசு சீல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், எட்டயபுரம்  என சீல் வைக்கப்பட்டு அன்றைய தேதியுடன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர்  கையொப்பம் இடப்பட்டு உள்ளது. இது நீதிமன்ற தாக்கலுக்கு ஏற்புடையதல்ல  எனவும் கையால் எழுதப்பட்டுள்ளது.

போலியாக வழங்கப்பட்டுள்ள சிட்டாவில் அரசு சீல் அதிக  அழுத்தத்துடனும், (ரப்பர் ஸ்டாம்பு செய்யப்பட்ட தலைமையிடத்து துணை  வட்டாட்சியர் சீல்) எட்டயபுரம் வட்டம் தூத்துக்குடி மாவட்டம் என குறிப்பிடப்பட்டு  ஏற்கனவே எட்டயபுரத்தில் முன்பு பணிபுரிந்த அதிகாரியின் கையொப்பம் அன்றைய  தேதியுடன் இடப்பட்டுள்ளது. மேலும் நகல் எண், நகல் தயாரித்தவர், நகல்  ஒப்பிட்டவர், மொத்த வார்த்தைகள், மொத்த பக்கங்கள் விவரம் அடங்கிய சீல்  ஆகியவை போலியான சிட்டாவில் இல்லை. ஒரு சில போலி சிட்டாவில் அந்த சீல்  வைக்கப்பட்டிருந்தாலும் அதன் விபரங்கள் எழுத்தால் குறிப்பிடப்படவில்லை,  இரண்டையும் அருகே வைத்து பார்த்தால்தான் அசலுக்கும், போலிக்கும்  வித்தியாசம் தெரியும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: