தாளவாடியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையை விரட்ட கும்கி கபில்தேவ் வந்தது: ரேடியோ காலர் பொருத்த திட்டம்

சத்தியமங்கலம்:  தாளவாடியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையை விரட்ட கும்கி கபில்தேவ் யானை வரவழைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அக்கூர் ஜோரை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கருப்பன் யானை, தினமும் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதோடு, இரவு நேரங்களில் காவல் பணி மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக திகினாரை, ரங்கசாமி கோவில், கரளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பன் யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ரங்கசாமி கோவில் பகுதியில் நடமாடும் கருப்பன் யானையை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவில் பயிர்களை சேதப்படுத்தி வரும் கருப்பன்  யானையை கண்காணிப்பதற்காக கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசனூரில் உள்ள கும்கி யானை ராமு இப்பகுதிக்கு கொண்டு வரப்பட உள்ளது. பகல் நேரத்தில் கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறினால் இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தி கருப்பன் யானையை விரட்டும் பணி நடைபெறும். கருப்பன் யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கருப்பன் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிப்பதற்காக தலைமை வன பாதுகாவலரின் அனுமதிக்காக கேட்டிருக்கிறோம். ரேடியோ காலர் பொருத்துவதற்கான உத்தரவு கிடைக்க பெற்றவுடன் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: