வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் மறியல்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார துணிக் கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சாலையோர  துணிக்கடைகள், வளையல், ஜூஸ் கடைகள் உள்ளிட்டவை செயல்படுகின்றன. இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதன்பேரில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியும், தொடர்ந்து கடைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கடைகளை அகற்ற மாநகராட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றமும் இந்த கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்தனர். அப்போது, வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு வந்த லாரியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, எம்.சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, வியாபாரிகள் சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் துணிகளை எடுப்பதற்காக அதிகளவில் வந்து செல்வதால், அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: