காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் பேரூராட்சி. இப்பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இதுதவிர காவேரிப்பாக்கம் பகுதியை சுற்றிலும் அத்திப்பட்டு, திருப்பாற்கடல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் காவேரிப்பாக்கத்திற்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். அதேபோல் காவேரிப்பாக்கத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் சென்னை, பெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் செல்கின்றன. சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் சாலையில், பயணியர் நிழற்குடை இல்லாத காரணத்தால், பயணிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக பஸ்கள் உள்ளே வராமல் வெளியே நின்றுவிட்டு செல்வதால், பயணிகள் தேசிய  நெடுஞ்சாலையை ஆபத்தான நிலையில் கடக்கின்றனர். பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் வெட்டவெளியில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

எனவே பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, தற்காலிக பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: