பாக்.கில் மாகாண அரசு கலைப்பு ஆளுநர் அதிரடி உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண அரசை கவர்னர் கலைத்தார். பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துங்க்வா மாகாணங்களில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதில் பஞ்சாப்பில் பிடிஐ.யின் கூட்டணி கட்சியான பிஎம்எல்க்யூ.வை சேர்ந்த சவுத்ரி பர்வேஸ் இலாகி முதல்வராக இருந்து வந்தார். இதனிடையே, வரும் மார்ச் மாதத்துக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் பஞ்சாப், கைபர் பக்துங்க்வா மாகாணங்களின் சட்டப்பேரவையை கலைக்கப் போவதாக இம்ரான் கான் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 48 மணி நேரத்திற்குள் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வரை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் அது அரசியலமைப்புக்கு உட்பட்டதல்ல என்று கூறி அவையை ஒத்தி வைத்தார். இந்நிலையில், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண ஆளுநர் பாலிகுர் ரகுமான், முதல்வர் இலாகியை டிஸ்மிஸ் செய்ததோடு அவரது அமைச்சரவையை கலைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து முதல்வர் இலாகி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி அபித் அஜிஸ் ஷெய்க் தலைமையில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வை லாகூர் உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

Related Stories: