அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு; டிரம்பை கொலை செய்வதற்கு ஆப்கன் நபரை அனுப்பிய ஈரான்: 2 கூட்டாளிகளும் கைது

வாஷிங்டன்: புதிய அதிபர் டொனால்டு டிரம்பை கொலை செய்வதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபரை ஈரான் அனுப்பி வைத்திருப்பதாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது அவரை கொல்ல முயற்சி நடந்தது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் டிரம்ப் காதில் காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில், டிரம்பை கொல்ல ஈரான் அரசால் நியமிக்கப்பட்ட நபர் கைதாகி இருப்பதாக அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் மெர்ரிக் கார்லாண்ட் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் பர்காத் ஷகேரி. ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவர் குழந்தையாக இருக்கும் போதே அமெரிக்காவில் குடியேறியவர். வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். பின்னர் நாடு கடத்தப்பட்ட இவரை, அமெரிக்க உளவுத்துறை எப்பிஐ கைது செய்துள்ளது. அவரது கூட்டாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஷகேரி பல திடுக்கிடும் தகவலை தெரிவித்ததாக எப்பிஐ கூறி உள்ளது.

அமெரிக்காவில் டிரம்பையும், ஈரானிய பத்திரிகையாளர், இஸ்ரேலை சேர்ந்தவர் உள்ளிட்டவர்களை கொல்வதற்காக ஈரான் ராணுவம் பணம் கொடுத்து தன்னை அனுப்பி வைத்ததாக ஷகேரி கூறி உள்ளார். இதற்காக 2 பேரை கூலிக்கு அமர்த்தி, டிரம்பை கண்காணிக்க வைத்துள்ளார் ஷகேரி. ஆனால் தேர்தல் சமயத்தில் டிரம்பை கொல்ல முடியாததால், தேர்தலில் டிரம்ப் எப்படியும் தோற்று விடுவார் அதன் பிறகு எளிதாக கொல்லலாம் என திட்டம் தீட்டியதாக ஷகேரி கூறி உள்ளார். இதன் மூலம் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்காவின் பிரபலமானவர்களை கொல்லும் சதியில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எப்பிஐ குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேல் காரணம்; ஈரான் குற்றச்சாட்டு
இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், அரசு ஊடகமான ஐஆர்என்ஏவுக்கு அளித்த பேட்டியில், ‘‘நிரூபிக்கப்படாத இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை. இதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது. ஈரான்-அமெரிக்கா உறவை சிக்கலாக்க இஸ்ரேலுடன் தொடர்புடையவர்கள் போலியாக உருவாக்கும் சதி இது’’ என்றார்.

The post அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு; டிரம்பை கொலை செய்வதற்கு ஆப்கன் நபரை அனுப்பிய ஈரான்: 2 கூட்டாளிகளும் கைது appeared first on Dinakaran.

Related Stories: