ஆனாலும், சில மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வந்தது. தற்போது அனைத்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்து இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மொத்தம் 538 எலக்டோரல் ஓட்டுகளில் டிரம்ப் 312 ஓட்டுக்களை வென்று அசத்தி உள்ளார். கமலா ஹாரிஸ் 226 ஓட்டுக்களை பெற்றுள்ளார். குறிப்பாக, அதிபர் தேர்தலில் அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனதியா, வட கரோலினா, ஜார்ஜியா ஆகிய 7 மாகாணங்களே வெற்றியாளரை தீர்மானிக்கும்.
இதில் கடைசியாக அரிசோனா மாகாணத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அரிசோனா மாகாணத்தையும் கைப்பற்றிய டிரம்ப் 7 முக்கிய மாகாணத்திலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 7 மாகாணங்களில் வட கரோலினாவை மட்டுமே கைப்பற்றி இருந்தார். இம்முறை மீதமுள்ள 6 மாகாணத்தையும் வென்று மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
1996ல் பில் கிளிண்டனுக்குப் பிறகு 2020ல் அரிசோனாவை கைப்பற்றிய முதல் ஜனநாயக வேட்பாளர் என்ற பெருமையை பைடன் பெற்றார். தற்போது அந்த மாகாணத்தையும் மீண்டும் குடியரசு கட்சி பக்கம் திருப்பி இருக்கிறார் டிரம்ப். இதுமட்டுமின்றி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் 52 உறுப்பினர்களுடன் டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சிக்கு 47 எம்பிக்கள் உள்ளனர்.
கீழமையான பிரதிநிதிகள் அவையில் டிரம்ப் கட்சிக்கு 216 எம்பிக்களும், ஜனநாயக கட்சிக்கு 209 எம்பிக்களும் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பலத்தை பெற 218 எம்பிக்கள் தேவை. விரைவில் அந்த எண்ணிக்கையை குடியரசு கட்சி எட்டும் என்பதால் நாடாளுமன்றத்திலும் டிரம்ப் கட்சி முழு பலத்தை பெற்றுள்ளது. இத்தகைய அசுர பலத்துடன் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
* கமலா கட்சிக்காக நிதி கேட்கும் டிரம்ப்
புதிய அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘கமலா ஹாரின் பிரசார முடிவில் ஜனநாயக கட்சிக்கு 20 மில்லியன் டாலர் (ரூ.170 கோடி) கடன் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் வங்கி கணக்கில் இப்போது நிறைய பணம் இல்லை. இதனால், பல நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். ஒரு கட்சி என்ற முறையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். எனவே குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ஜனநாயக கட்சிக்கு நிதி உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.
* நிக்கி ஹாலே, பாம்பியோ கிடையாது
டிரம்பின் முன்னாள் அமைச்சரவையில் இருந்த முக்கிய நபர்கள் இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே மற்றும் மைக் பாம்பியோ. நிக்கி ஹாலே ஐநா தூதராக பதவி வகித்தார். பாம்பியோ வெளியுறவு அமைச்சராக இருந்தார். இதில் ஹாலே, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டார்.
பின்னர் கடைசி கட்டத்தில் போட்டியிலிருந்து வெளியேறி டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள் என டிரம்ப் அறிவித்துள்ளார். அவர்களின் முந்தைய பணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிரம்ப், புதிய அமைச்சரவை தேர்வு குறித்த பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.
The post அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி முடிவு வெளியீடு 7 முக்கிய மாகாணத்திலும் டிரம்ப் அமோக வெற்றி: அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கிறார் appeared first on Dinakaran.