இஸ்ரேல்-ஹமாஸ் சமரச முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார்

டெய்ர் அல் பலா: இஸ்ரேலுக்கும் ஹமாசுகும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் போரில் 43,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் உள்ள 90 சதவீத மக்கள் அகதிகள் முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த போரில் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடத்தப்பட்ட சமரச முயற்சிகளில், கத்தார், எகிப்து நாடுகள் இடம் பெற்றன. பணய கைதிகள் விடுதலை, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்த கத்தார் தற்போது சமரச முயற்சிகளை நிறுத்தியுள்ளது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே மீண்டும் சமரச முயற்சிகளில் ஈடுபடுவோம் என கத்தார் கூறியதாக எகிப்து அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கத்தார் வட்டாரங்கள் கூறுகையில்,இனி பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றால் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஹமாசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றன. கடைசி சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததும் கத்தாரில் உள்ள ஹமாஸ் பிரதிநிதிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என கத்தாரிடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஹமாசின் அரசியல் பிரிவு அலுவலகம் டோஹாவில் உள்ளது. இந்த சூழலில் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 சிறுவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். மேலும் லெபனானின் அல்மட்ஸ் ஜெபில் மாவட்டத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.

The post இஸ்ரேல்-ஹமாஸ் சமரச முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார் appeared first on Dinakaran.

Related Stories: