சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு ஆபத்து..? திடீர் உடல் எடை குறைவால் நாசா கவலை

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் உடல் எடை திடீரென மிகவும் குறைந்திருப்பதால் அவர் மீது கவனம் செலுத்துவதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், நாசா விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து தயாரித்த ‘போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலம் மூலம் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் கடந்த ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். வெறும் 8 நாளில் திரும்பி வரக்கூடிய இப்பயணமாக சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பிய நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரும் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தொடர்ந்து தங்கி உள்ளனர்.

அவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலமாக பூமிக்கு திரும்ப முடியும். 5 மாதத்திற்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் அங்கிருந்த படி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில், சுனிதா வில்லியம்ஸ் உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்து காணப்படுகிறார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விண்வெளிக்கு சென்று சாதித்த வீராங்கனைகளில் குறிப்பிடத்தக்கவரான சுனிதா வில்லியம்சின் உடல் நிலை மோசமடைந்துள்ளதா? அவரது பலவீனத்திற்கு நோய் தொற்று பாதிப்பா என பலரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களும் கவலை கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இப்புகைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இருந்தே சுனிதா வில்லியம்சின் உடல் எடை மெலிந்து வருவதாகவும் அது குறித்து நாசா மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுத்து கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாசா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘விண்வெளியில் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக உடல் எடை குறைதல் நடக்கக் கூடிய விஷயம். இதற்காக பயப்பட தேவையில்லை. சுனிதா உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.

விண்வெளியில் உடல் எடை குறைய காரணம்
நாசா ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘சுனிதா வில்லியம்ஸ் எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். விண்வெளிக்கு செல்வதற்கு முன் அவர் 63.5 கிலோ எடையுடன் இருந்தார். அந்த உடல் எடையை தொடர்ந்து பராமரிக்க தினமும் 3,500 முதல் 4,000 கலோரிகளை உட்கொள்ள வேண்டும். அது செய்யாத பட்சத்தில் உடல் எடை குறையும். மேலும் ஆய்வாளர்கள் விண்வெளியில் தங்கள் தசை மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க தினமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்வதும் வழக்கம். அதற்கும் சேர்த்து அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டும்’’ என்றார்.

மறைக்கிறது நாசா
விண்வெளியில் 8 மாத ஆய்வுப்பணிகளுக்குப் பிறகு 4 விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த மாதம் 25ம் தேதி பூமிக்கு திரும்பினர். இதில் 3 பேர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு விண்வெளி ஆய்வாளருக்கு மட்டும் உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் யார், அவருக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பதை நாசா இதுவரையிலும் வெளியிடவில்லை. இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு ஆபத்து..? திடீர் உடல் எடை குறைவால் நாசா கவலை appeared first on Dinakaran.

Related Stories: