பொங்கல் பண்டிகையையொட்டி உடுமலை பகுதியில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்

உடுமலை : பொங்கல் பண்டிகை நெருங்குவதால், உடுமலை பகுதியில் வெல்லம் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் அமராவதி பாசனப்பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளில் பலர் அமராவதி சர்க்கரை ஆலைக்கு தங்களது கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர். ஒரு சிலர் தாங்களாகவே கரும்பினை அறுவடை செய்து பாகு காய்ச்சி அவற்றை உருண்டை வெல்லமாகவும், அச்சு வெல்லமாகவும், நாட்டுசர்க்கரையாகவும் மாற்றி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல பிரசாதக்கடை உரிமையாளர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்கின்றனர். இதுதவிர கேரள மாநிலம் சபரிமலை, குருவாயூர் கிருஷ்ணன் கோயில் போன்றவற்றில் வழங்கப்படும் பிரசாதத்திற்கும் உடுமலையில் இருந்தே வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் பருவமழை நன்றாக பெய்தததன் காரணமாக கரும்புக்கு தேவையான தண்ணீர் கிடைத்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைத்து கூடுதலாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் வெல்ல விற்பனை களை கட்டும். இதையடுத்து, தற்போது உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

Related Stories: