தாளவாடியில் காட்டை விட்டு வெளியேறும் விலங்குகளை தடுக்க சூரிய சக்தி மின்வேலி அமைப்பு

*மாவட்ட வன  அதிகாரி தொடங்கி வைத்தார்

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதியில் காட்டை விட்டு வெளியேறும் விலங்குகளை தடுக்க ரூ.16  லட்சத்தில் 4 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்வேலியை ஆசனூர் மாவட்ட வன  அலுவலர் தேவேந்திர குமார் மீனா தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மலைக்கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளால், விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் சேதம் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதைத்தடுக்க வனத்துறையினரும் வனப்பகுதியை ஒட்டி வனத்துறையினர் அகழி வெட்டி உள்ளனர். இருப்பினும் அகழி பராமரிக்கப்படாமல் இருந்ததால் வனவிலங்குகள் எளிதாக வனப்பகுதியை கடந்து ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட இரிபுரம் முதல் மல்குத்திபுரம் தொட்டி வரை 4 கிமீ தூரத்திற்கு வனத்துறை சார்பில் வனப்பகுதியை ஒட்டி அகழி வெட்டப்பட்ட பகுதியில் வனவிலங்குகள் வெளியேறாமல் தடுக்க சூரிய சக்தி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம்  நிதியும், விவசாயிகள் பங்களிப்பாக ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சூரிய சக்தி மின்வேலியை நேற்று ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாளவாடி வனச்சரகர் சதீஷ், வனவர் பெருமாள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: