ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா-கலெக்டர் தலைமையில் நடந்தது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:

உலகில் பல்வேறு மதங்கள் இருந்தாலும், அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. மனிதர்களை நேசிக்க சொல்கின்றன. காடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு விலங்குகளும் தன்னை இந்த மதம் என்றும், இந்த இனம் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. அறிவியலின் அடிப்படையில் நாம் குரங்கிலிருந்து வந்துள்ளோம் என்பதை நம்புவோமேயானால் நிச்சயம் நாம் அனைவருமே ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தான்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 238 லட்சம் சிறுபான்மையினர் மக்கள் வசிக்கின்றனர்.  மாவட்ட மக்கள் தொகையில் 14.09 சதவீதம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், அடக்கஸ்தலங்க்ள், தைக்காக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், மூஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின்  மேம்பாட்டிற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் 2009ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வாரியத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, கருச்சிதைவு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட உதவித்தொகைகள், விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி உதவித்தொகை,  முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில்  நேற்று முன்தினம் வரை 387 நபர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 21 பெண் உலமா உறுப்பினர்கள் உள்ளனர். மதத்தால் வேறுபட்டாலும் நம் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் இணைந்து ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறோம். அனைத்து இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் நல்வாழ்த்துக்கள். கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, 25 உலமாக்களுக்கு நலவாரிய அட்டைகள் மற்றும் 2 முஸ்லீம் மகளிருக்கு தையல் இயந்திரம், கிறித்துவ மகளிர்களுக்கு உதவும் சங்க உறுப்பினர்கள், 6 நபர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ மீனாட்சி சுந்தரம், கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையர் சத்யபிரசாத், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம் மற்றும் சிறுபான்மையினர் சமுதாய மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: