பினாமி சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

புதுடெல்லி: பினாமி சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்ப்பு சீராய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. பினாமி பரிவர்த்தனைகள் தடுப்பு சட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது.   பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய திருத்தத்தின்படி, தண்டனை காலம் 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் பினாமி சொத்தின் மதிப்பில் 25 சதவீதத்தை அபராதமாக விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருந்தது.  இது தவிர வேறு சில திருத்தங்களும் செய்யப்பட்டிருந்தது. இந்த சட்டத் திருத்தம் 2016 அக்டோபர் 25ம் தேதியன்று அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், அதை 2016 அக்டோபருக்கு முன் நடந்த பினாமி பரிவர்த்தனைகளுக்கு பொருத்தாது என்று அறிவிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், தண்டனை அதிகரிப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் புதிய சட்ட திருத்தத்தை முன் கூட்டியே அமல்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே வருமான வரி அதிகாரிகள் நாடு முழுவதும் புதிய சட்டத் திருத்தத்தின்கீழ்  ஏராளமான வழக்குகளை 2016 அக்டோபர் 25ம் தேதிக்கு முன் நடந்த குற்றங்களிலும் பதிவு செய்திருந்தனர். இதனால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: