நான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பிரிவு உபசார பேச்சால் சர்ச்சை

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் பேசியதாவது: நான் இளம் வயதில் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். நான் என் குழந்தை பருவத்தில் இருந்து என் இளமை காலம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து இருக்கிறேன். நான் தைரியமாகவும், நேர்மையாகவும் செயல்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக, தேசபக்தி மற்றும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வையும் அங்கு இருந்துதான் கற்றுக்கொண்டேன். நான் மேற்கொண்ட பணியின் காரணமாக சுமார் 37 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து விலகி இருந்தேன்.

அதே சமயம் எனது பணியின் எந்த முன்னேற்றத்திற்கும் நான் எனது ஆர்எஸ்எஸ் உறுப்பினர் அந்தஸ்தை பயன்படுத்தவில்லை. எனக்கு அனைவரும் சமம். நான் யாருக்காகவும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் தத்துவம் அல்லது நெறிமுறைக்காகவும் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை. கொள்கைகளின் அடிப்படையில் நீதியை வழங்க முயற்சிசெய்தேன். என் வாழ்க்கையில் நான் எந்தத் தவறும் செய்யாததால், நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு தைரியம் உள்ளது.

அப்படி சொல்வதில் எந்தவித தவறில்லை. தற்போது அந்த அமைப்பின் நண்பர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. அதே நேரத்தில் அங்கிருந்து அழைப்பு வந்தால், தற்போது அவர்களுடன் இணைந்து நல்ல பணிகளை செய்ய தயாராக இருக்கின்றேன். ஏதேனும் உதவிக்காகவோ அல்லது என்னால் முடிந்த எந்தப் பணிக்காகவோ என்னை அழைத்தால், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத் திரும்பிச் செல்லத் தயார். இவ்வாறு அவர் பேசினார்.

1962ம் ஆண்டு ஒடிசாவின் சோனேபூரில் பிறந்த நீதிபதி தாஸ், 1985ல் கட்டாக்கில் சட்டப் பட்டம் பெற்றார். 1986ல் வழக்கறிஞராகப் பதிவுசெய்தார். 2009ல் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2022 ஜூன் 20ல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாறுதலாகி வந்தார். சுமார் 14 ஆண்டுகள் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

The post நான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பிரிவு உபசார பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: