இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகளில் உடல் உறுப்புகளுக்காக 200க்கும் மேற்பட்டோர் ஈரானுக்கு கடத்தல்: கேரள போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சிறுநீரகம், கல்லீரல் உள்பட உடல் உறுப்புகளுக்காக ஈரான் நாட்டுக்கு ஆட்கள் கடத்தப்படுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கேரள போலீசுக்கு என்ஐஏ தகவல் தெரிவித்தது. இதையடுத்து கேரள போலீசார் நடத்திய விசாரணையில் உடல் உறுப்புகளுக்காக ஆள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபரான பாலக்காட்டைச் சேர்ந்த சாபித் நாசர் என்பவர் குவைத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் வருவது தெரியவந்தது.

உடனடியாக எர்ணாகுளம் போலீசார் விரைந்து செயல்பட்டு கொச்சி விமான நிலையத்தில் வைத்து சாபித் நாசரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு: பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன் சாபித் நாசர் தன்னுடைய சிறுநீரகத்தை விற்க திட்டமிட்டுள்ளார். ஐதராபாத்தில் சிறுநீரகத்திற்கு அதிக பணம் கிடைக்கும் என தெரியவந்ததை தொடர்ந்து அவர் அங்கு சென்றார்.

ஆனால் அங்கு சென்று பின்னர் தான் சிறுநீரகத்திற்காக ஆள் கடத்தலில் ஈடுபடும் ஒரு கும்பல் குறித்து அவருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கும்பலுடன் சேர்ந்த சாபித் நாசரும் உடல் உறுப்புகளுக்காக ஆள் கடத்தலில் ஈடுபடத் தொடங்கினார். பணக்கஷ்டத்தில் உள்ளவர்களை அணுகி அவர்களிடம் பண ஆசை காட்டி சிறுநீரகம் உள்பட உடல் உறுப்புகளை விற்பனை செய்ய அவர் கட்டாயப்படுத்துவார்.

அதற்கு சம்மதிப்பவர்களுக்கு போலி ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை தயார் செய்து ஈரான் நாட்டுக்கு அனுப்பி வைப்பார். கடந்த 3 வருடங்களில் மட்டும் இவர்கள் பெங்களூரு ஐதராபாத், கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை ஈரான், குவைத் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி உடல் உறுப்புகளை விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சாபித் நாசரை காவலில் எடுத்து விசாரிக்க தீர்மானித்துள்ளனர்.

The post இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகளில் உடல் உறுப்புகளுக்காக 200க்கும் மேற்பட்டோர் ஈரானுக்கு கடத்தல்: கேரள போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: