மம்தா குறித்து சர்ச்சை கருத்து முன்னாள் நீதிபதிக்கு 24 மணி நேரம் தடை: தேர்தல் கமிஷன் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பாஜ வேட்பாளருமான அபிஜித் கங்கோபாத்யாய் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்து உள்ளது. மேற்குவங்க மாநிலம் தாம்லூக் மக்களவை தொகுதி பா.ஜ வேட்பாளராக அபிஜித் கங்கோபாத்யாய் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு மார்ச் 7ல் பா.ஜவில் இணைந்தார்.

தற்போது பா.ஜ வேட்பாளராக களத்தில் குதித்து உள்ளார். மே 15ம் தேதி ஹால்டியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்குவங்க முதல்வர் மம்தா குறித்து சர்ச்சையான முறையில் விமர்சனம் செய்தார். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், மாஜி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பிரசாரம் செய்ய தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

நேற்று மாலை 5 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் பாஜ தலைவர் ஜே.பி. நட்டாவிடம், பிரச்சாரக் காலத்தில் இந்தத் தவறு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து வேட்பாளர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆலோசனை வழங்குமாறும் தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில்,’ அபிஜித் கங்கோபாத்யாயின் கருத்து தரம் தாழ்ந்த அளவிலான தனிப்பட்ட தாக்குதல். இதுபோன்ற அருவருப்பான வார்த்தைகள் கங்கோபாத்யாயாவிடம் இருந்து வந்துள்ளன என்பது வேதனையை தருகிறது’ என்றுகுறிப்பிட்டுள்ளது.

The post மம்தா குறித்து சர்ச்சை கருத்து முன்னாள் நீதிபதிக்கு 24 மணி நேரம் தடை: தேர்தல் கமிஷன் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: