மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர்களின் நிசும்பன்சூதனி சிற்பம் கண்டுபிடிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த  ராமலிங்க அம்பலம் என்பவர் எங்கள் ஊரில் ஒரு பழமையான அம்மன் சிற்பம்  இருப்பதாக கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த  மீனாட்சிசுந்தரம், முனைவர் தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தைச்  சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பம்  பிற்கால பாண்டியரின் கலை பாணியில் அமைந்த நிசும்பன்சூதனி சிற்பம் என தெரிந்தது.

இதுகுறித்து அவர்கள்  கூறியதாவது: இந்த சிற்பம் நான்கரை  அடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக  செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் பகுதிக்கு நான்கு கரங்கள் வீதம்  எட்டு கரங்களை கொண்டுள்ளது. இந்த கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம்,  வில், அம்பு, மணி போன்ற ஆயுதங்களைத் தாங்கிய படி சிற்பம் கம்பீரமான  தோற்றத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தலையில் மகுடத்துடன் கூடிய  ஜடாபாரத்துடனும் மார்பில் கபால மாலை அணிந்த படியும், கழுத்தில் ஆபரணங்களுடன்  சிற்பத்தின் இடது காதில் பத்திர குண்டலமும், வலது காதில் பிரேதத்தை  அணிகலன்களாகவும் அணிந்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் கச்சை  அணிந்தபடி வலது காலை பீடத்தில் குத்த வைத்தும், இடது காலை நிசும்பன் தலைமீது  வைத்தும் உட்குதியாசனக் கோலத்தில் சிற்பம் பிற்காலப் பாண்டியரின்  கைவண்ணத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிசும்பன்சூதனிக்கு சோழர் காலத்தில்  தஞ்சையில் விஜயபாலன் என்ற சோழ மன்னன் 12ம் நூற்றாண்டில் முதன் முதலில்  கோயில் கட்டி வழிபட்டுள்ளார். அந்த வகையில் பிற்காலப்  பாண்டியர்கள் அந்த காலகட்டத்தில் நிசும்பன்சூதனிக்கு வெள்ளிக்குறிச்சியில்  தனிகோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்றனர்.

Related Stories: