அனுமதியின்றி வைத்த பேனரை அகற்ற எதிர்ப்பு: போலீசாருக்கு செல்லூர் ராஜூ மிரட்டல்

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று, முனிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக தொண்டர்கள்தான் கட்சியை உயிரோட்டத்தோடு வைத்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள். ஆனால், தலைவர்கள், நிர்வாகிகள் கட்சி மாறுவார்கள்.

நாங்கள் எடப்பாடி தலைமையில் ஒன்றாக இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக அதிமுகவினர் 4 பிளக்ஸ்ரீ பேனர்கள் வைத்தனர். பிளக்ஸ்ரீ பேனர் வைத்தால்தான் எதிர்க்கட்சிகாரர்கள். அப்போதுதான் தங்கள் பெயரை அவர்கள் வெளிப்படுத்த முடியும். இவற்றை காவல்துறை அகற்ற முயலக்கூடாது. காவல் துறையினரே.... அதிமுகவை சீண்டி பார்க்காதீர்கள். தேனீக்கள் போல நாங்கள் அமைதியாக இருப்போம். பிறகு கொட்டி விடுவோம்’’ என்றார்.

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு பிளக்ஸ்ரீ பேனர்கள் வைக்க போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி வைக்கப்பட்டது. இதனை அகற்றும்படி போலீசார் கூறினர். அப்போது, அதிமுகவினர் அகற்ற மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சுட்டிக்காட்டி, செல்லூர் ராஜூ, போலீசாரை மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: