நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு; 2 நாய்க்குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நாய்க்குட்டிகளை நல்ல பாம்பு பாதுகாத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத், இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதன் அருகில் சிறிய பள்ளம் எடுத்துள்ளார். அதில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த நாய் ஒன்று 3  குட்டிகளை ஈன்றுள்ளது. குட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு உணவு தேடி தாய் நாய் வெளியே சென்றது.  அந்த நேரத்தில் அவ்வழியாக  ஊர்ந்து வந்த நல்ல பாம்பு, நாய்க்குட்டிகள் அருகே பாதுகாப்பாக இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள்  பாம்பு, நாய்க்குட்டிகளை கடித்து விடுமோ என அஞ்சி குட்டிகளை எடுக்க முயன்றனர்.

உடனே நல்ல பாம்பு யாரையும் அருகே வரவிடாமல் படம் எடுத்து ஆடியது. அதிர்ச்சியடைந்த மக்கள் பாம்பை விரட்ட முயன்றனர். ஆனால் அது படம் எடுத்தபடி சீறியது. சிறிது நேரத்தில் அங்கு திரும்பிய தாய் நாய், குட்டிகளின் அருகே பாம்பை பார்த்ததும் குரைத்தபடி வேகமாக அருகில் சென்றது. அப்போது தாய் நாயையும் அந்த பாம்பு, அருகே வரவிடாமல் சீறியது. நாய்க்குட்டிகளை பாம்பு பாதுகாத்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தகவலறிந்து கடலூர் வனஅலுவலர் செல்லப்பா வந்து,  நல்ல பாம்பை சாமர்த்தியமாக பிடித்து பாதுகாப்பாக எடுத்து சென்றார்.

Related Stories: