கொள்ளிடம் அருகே பழமையான பக்கிங்காம் கால்வாய் ஆழப்படுத்தப்படுமா?

*கடலோர மக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம் : தமிழக வரலாற்றில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியின்போது நீர்வழிப் போக்குவரத்தில் பக்கிங்காம் கால்வாய் முக்கிய பங்கு வகித்து வந்தது. பக்கிங்காம் கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. 1806-ல் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு, பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

1886-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் அந்தக் கால்வாயை வெட்டுவது மேலும் நீட்டிக்கப்பட்டது. பஞ்சத்தின் கொடுமையைக் குறைக்கும் வழியாக அன்றைய ஆங்கிலேய ஆளுநர் பக்கிங்காம் என்பவரால் காக்கி நாடா முதல் வேதாரண்யம் வரை கால்வாய் வெட்டப்பட்டு நீர் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதனால்தான் இந்தக் கால்வாய் பக்கிங்காம் கால்வாய் என்று அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. கடலை ஒட்டியே கடலுக்கும் கால்வாய்க்கும் இடையில் கடலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அந்தக் கால்வாய் வெட்டப் பட்டது. கடலின் உவர் நீரே அந்தக் கால்வாயில் நிறைந்தது. இதனால் பாக்கியம் கால்வாயில் குறிப்பிட்ட ஆழத்திற்கு தொடர்ந்து தண்ணீர் இருந்து வந்தது. வேதாரண்யம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, மரக்காணம், மாமல்லபுரம், சென்னை என்று பக்கிங்காம் கால்வாய் வட திசையில் பயணிக்கிறது.

நெல், உப்பு மற்றும் இதர பொருள்கள் படகு மூலம் இங்கும் அங்கும் பயணித்தன. இன்றைக்கும் மயிலாப்பூரில் பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள ஓர் இடத்துக்கு தண்ணித்துறை என்ற பெயர் உள்ளது. அங்கே காய்கறி அங்காடி செயல்படுகிறது. படகு மூலம் சென்னைக்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்டு இங்கே சந்தைப் படுத்தப்பட்டன. சென்னையின் பக்கிங்காம் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தானது மனித தேவைக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ரயில் போக்குவரத்து, அஞ்சல் அலுவலகம் போன்ற மகத்தான திட்டங்களில் இந்த பக்கிங்காம் கால்வாய் திட்டமும் ஒன்றாகும். ஆங்கிலேயரின் ஆட்சியில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட நீர்வழிப் போக்குவரத்து அவர்கள் நாட்டைவிட்டுச் சென்ற இருபது முப்பது ஆண்டுகளில் வீணாகிப்போனது.சென்னையில் மூலக்கொத்தளம் என்ற இடத்தைப் பலரும் பார்த்திருப்பர். அங்கே கருவாட்டு மண்டி பிரபலம். ஆந்திர பகுதிகளில் இருந்து வரும் கருவாடுகள் மூலக்கொத்தளம் அருகே இருக்கும் படகுத்துறையில் வந்து இறங்கும்.

1960-70 வரைகூட அங்கே கருவாடு இறக்குவதற்கான படகுத்துறை நல்ல நிலையிலே இருந்தது. இப்போதும்கூட சிதிலமான நிலையிலே அங்கே படகுத்துறை ஆதாரமாக இருப்பதைப் பார்க்க முடியும்.பக்கிங்ஹாம் கர்னாடிக் கால்வாய்க்கு மேலே ரயில்பாதையும் அதற்கு மேலே பேருந்து செல்லும் சாலையும் அமைக்கப்பட்டது. உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட இடம் என்ற சிறப்பும் உண்டு. உப்பு நீர் பாதையாக இருந்த இந்தக் கால்வாய், பின்னர் சாக்கடைகள் கலக்கும் பாதையாகவும் மாறிப் போனது. சில இடங்களில் இயற்கையான சேதாரங்களால் கால்வாய் மூடப்பட்டுக் கிடக்கிறது. சில இடங்களில் இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாயை மீண்டும் செப்பனிட வேண்டும் என்பது பொதுவான நோக்கமாக இருக்க வேண்டும். உள்ளூர் பிரச்னைகள், அரசியல் லாப நட்ட கணக்குகளால் இக்கால்வாயின் மகத்துவம் புதைந்து விடக்கூடாது.2006ல் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரை இக்கால்வாயை முதல்கட்டமாக வாய்ப்பு இருக்கும் இடங்களில் டெண்டர் விடப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் திட்டம் முழுமை பெறவில்லை. அடுத்து 2011-ல் சென்னையிலிருந்து முட்டுக்காடு வரை படகு போக்குவரத்துக்கு முயற்சித்தனர்.

மீண்டும் மீண்டும் கால்வாயை சீரமைக்கும் திட்டம் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் கால்வாயின் இரு கரைகளிலும் கான்கிரிட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமியின் போது புதுச்சேரியை காப்பாற்றியதில் இக்கால்வாயின் பணி மகத்தானது.சுமார் 100 மீட்டர் வரை அகலப்படுத்தி, 10 மீட்டர் வரை ஆழப்படுத்தினால் அழகான நீர்வழிப்பாதை தயாராகும். சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்தலாம். வேதராண்யம் முதல் ஆந்திரா வரை சரக்குகள் அனுப்பலாம். மாசடைவது குறையும். சுனாமி வந்தால் பாதிப்பு இருக்காது என எண்ணற்ற நன்மைகளைப் பட்டியல்கள் இருந்தாலும் இந்த பழமையானக் கால்வாய் மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதே உண்மை.

ஆக்கிரமிப்பாளர்களின் சரணாலயமாக மாறியது என்பதை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். நெடுந்தூர இக்கால்வாயின் சுவடுகளில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது சற்று சிரமமான வேலை தான். இருந்தும் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி ஆள் படுத்துவதன் மூலம் எந்த பாதகமும் இல்லாத நீர்வழி போக்குவரத்தை பயன்படுத்தி வருவாயை ஈட்ட முடியும்.

எனவே பக்கிங்காம் கால்வாயை பழமை மாறாமல் தூர்வாரி ஆழ் படுத்தி சீரான நீர் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலோர கூழையாறு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அங்குதன் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: