ஈரோடு மாநகரில் பலத்த மழை-வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு : ஈரோடு நகரில் நேற்று மதியம் திடீரென  பலத்த மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக ஈரோடு நகரில் மழை இல்லாத நிலையில், நேற்று அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து லேசான வெயிலுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் வெயில் தகித்த நிலையில், மதியம் 2 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று விசியது. பின்னர் 2.30 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் நகரின் பிரதான பகுதிகளான முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, பிரப் சாலை, மணிக்கூண்டு, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தி சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், தொடர்ந்து, விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இதமான சூழலை ஈரோடு மாநகர மக்கள் அனுபவித்தனர்.

Related Stories: