கிராம உதவியாளர் பணிக்கான வினாத்தாள் வலைத்தளத்தில் ‘லீக்’: மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு

மதுரை: கிராம உதவியாளர் பணியிடத்திற்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள 11  தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத 13,958 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 11,265 பேர் எழுதினர். இவர்கள், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக இருப்பதால், தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இதற்காக கேள்வியை கொடுத்து, பதில் எழுதும் முறையில் தேர்வு இல்லை. இதற்குப்பதிலாக தமிழில் ஒரு பாராவும், அதேபோல், ஆங்கிலத்தில் ஒரு பாராவும் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட பாராவில் உள்ள எழுத்துகளை பார்த்து விடைத்தாளில் அப்படியே, பிழையின்றி எழுத வேண்டும். முதல் அரைமணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறித்தேர்வும், அடுத்த அரைமணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறித்தேர்வும் நடைபெற்றது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்களும் எழுதினர்.

 ஒவ்வொரு தாலுகாவிலும், ஒவ்வொரு விதமான தலைப்பில், பாரா கொடுக்கப்பட்டது. இதில், மதுரை தெற்கு தாலுகாவில் கொடுக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான பாரா நேற்று முன்தினம் இரவு வெளியானதாகவும், இந்த கேள்வித்தாள் தன்னிடம் உள்ளது என்றும், ரூ.10 ஆயிரம் கொடுத்தால், பிரதி தருவதாகவும் ஒருவர் வீடியோவில் பேசி, சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைக் கண்ட மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் கல்யாணசுந்தரம், உடனே ஆங்கிலத்திற்கான கேள்வித்தாளை மாற்றி, இரவோடு இரவாக தயாரித்து, நேற்று புதிய வினாத்தாள் மூலம் தேர்வு நடந்தது.

இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், ‘‘வினாத்தாள் வெளியானது தொடர்பாக போலீசில் தாசில்தார் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: