திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது பலாத்காரம் ஆகுமா?: மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் முன்ஜாமின் வழங்கியதால் பரபரப்பு

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது பலாத்காரம் ஆகாது என்ற வாதம் வைக்கப்பட்ட நிலையில், மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான முகேஷ் குமார் சிங் என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  பெண் ஒருவரை சந்தித்தார்.

பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். கடந்தாண்டு  ஆகஸ்ட்டில் வேறொரு பெண்ணுக்கும், முகேஷ் குமாருக்கும் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது. அதையறிந்த அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து  கொள்ளுமாறு கூறிவிட்டு ஏமாற்றியதாகவும், பாலியல் பலாத்கார புகார் அளிக்க  போவதாகவும் முகேஷ் குமார் சிங்கை மிரட்டினார். அவர் கூறியது போன்று அதே ஆண்டு  அக்டோபரில் முகேஷ் சிங் மீது ஜெய்ப்பூர் போலீசில் புகார் அளித்தார்.  போலீசாரும் முகேஷ் குமார் சிங் மீது பாலியல் பலாத்கார் வழக்கு பதிவு  செய்தனர். முன்ஜாமீன் கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் முகேஷ் குமார்  சிங் முறையிட்டார்.

ஆனால் உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் மறுத்தது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குமார் சிங்  முறையிட்டார். இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள்  சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு  விசாரணைக்கு வந்தது. முகேஷ் குமார் சிங் சார்பில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நமித் சக்சேனா, ‘காதலை  முறித்துக் கொண்டு, வேறொரு பெண்ணை தேர்வு செய்ய ஆணுக்கு உரிமை உள்ளது. இடைபட்ட காலத்தில் இருவரின் விருப்பத்தின் பேரில் பாலியல் ரீதியாக உறவு கொண்டால், அது பாலியல் பலாத்காரமாக கருதக் கூடாது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் குமார் சிங்கிற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் முன்ஜாமின் வழங்குகிறோம். ஆனால், அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 438(2)ன் உத்தரவுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். தற்போது வழங்கப்பட்ட முன் ஜாமினானது, வழக்கின் தகுதி அடிப்படையில் முன்ஜாமின் கொடுக்கப்பட்டதாக கருதக்கூடாது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கின் தகுதி மற்றும் சட்டத்தின்படி நீதிமன்றம் முடிவு செய்யலாம்’ என்று உத்தரவிட்டது.

Related Stories: