செங்கம் அருகே அதிகாலை பயங்கரம்; அரசு பஸ் மீது லாரிகள் மோதல்; டிரைவர் உள்பட 3 பேர் பலி: கண்டக்டர் உட்பட 33 பேர் படுகாயம்

செங்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு 9 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பேர் பயணித்தனர். பஸ்சை பண்ருட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிவாசகம்(50) என்பவர் ஓட்டிச்சென்றார். கடலூரை சேர்ந்த இளவரசன்(40) என்பவர் கண்டக்டராக பணியாற்றுகிறார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமம் அருகே  புதுச்சேரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை முந்தி செல்ல அரசு பஸ் டிரைவர் முயன்றார். அப்போது, எதிரே பெங்களூரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு பண்ருட்டி நோக்கி வந்த லாரியும், அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அதேநேரத்தில் பஸ்சின் பின்னால் கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் அரசு பஸ்சின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்புறமும், பின்புறமும் நொறுங்கியது. இரண்டு லாரிகளும் சேதமானது. இந்த கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் மணிவாசகம், லாரியில் லோடு மேனாக வந்த ராஜேஷ்(37), மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காய்கறி லாரி டிரைவர் சிவக்குமார் (35), பஸ் கண்டக்டர் இளவரசன், பஸ் பயணிகளான ஜெயந்தி, சுஜாதா(32), அமைதிக்கண்ணன்(25), சேகர்(62), முருகன், ஜெயந்தி(45), முனிராஜ்(36), இவரது மனைவி மகாலட்சுமி(31), மகன் சரத்குமார்(14), மகள் அபிநயா(12) மற்றும் சூர்யா(28), வெங்கடகிருஷ்ணன்(41), வினோத்(30), இவரது மனைவி ெஜயப்பிரியா(28) மற்றும் பப்பு(44), கணேசன்(55), தண்டபாணி (55) உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த செங்கம் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 33 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் செங்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கண்டக்டர் இளவரசன், லாரி டிரைவர் சிவக்குமார், பெண் பயணி ஜெயந்தி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: