தெலங்கானாவில் பாதயாத்திரை சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சகோதரி ஷர்மிளா திடீர் கைது

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சகோதரியும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் பிரஜா பிரஸ்தானம் (மக்கள் கேள்வி) என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரது பாதயாத்திரை நர்சம்பேட்டையில்  223வது நாளாக நேற்று மதியம் நடைபெற்றது. இதில் ஷர்மிளா நர்சம்பேட்டை ஆளும் டி.ஆர்.எஸ்.கட்சி எம்எல்ஏ பெட்டி சுதர்சன் ரெட்டிக்கு எதிராக பேசியுள்ளார். இதனால் ஷர்மிளாவின் நடைப்பயணத்தை டிஆர்எஸ் கட்சியினர் திடீரென தடுத்து நிறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் ஹனுமகொண்டா மாவட்டம் சங்கரந்தண்டாவில் பாதயாத்திரையின்போது ஷர்மிளா பயன்படுத்தும் பேருந்து மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. மேலும் ஷர்மிளாவின் கேரா வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் ஷர்மிளா பாதயாத்திரைக்காக வந்த வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். ஷர்மிளாவை திரும்பி செல்லும்படி கூச்சலிட்டனர். இதனால்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து தொடர்ந்து நடைபயணம் மேற்கொள்ள முயன்ற ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கைது செய்ததாக  போலீசார் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட டிஆர்எஸ்- ஒய்எஸ்ஆர்டிபி கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா கூறுகையில், ‘தனது பாதயாத்திரையை தடுக்க முதல்வர் சதி செய்வதாக குற்றம் சாட்டுகிறேன். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

நான் தங்கியிருந்த வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன் பாதயாத்திரையில் வந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் பாதயாத்திரையை நிறுத்த மாட்டேன். இது நடக்கும் என்பது போலீசாருக்கு தெரிந்தும், வன்முறைக்கு துணையாக போலீசார் செயல்பட்டுள்ளனர்’ என கூறினார்.

Related Stories: