மதுரை அரசு மருத்துவமனையில் வெளியூர் நோயாளிகளுக்கு பேருதவி புரியும் டிஜிட்டல் அஞ்சலகம்: அவசரத்திற்கு ஆதார் மூலம் பணம் எடுக்கும் வசதி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் அமைந்திருக்கும் டிஜிட்டல் அஞ்சலகம் மூலம் வெளியூர் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அவசரத்திற்கு ஆதார் மூலம் பணம் எடுக்கலாம். தினசரி 100க்கும் மேற்பட்ட தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. மேலும், சிறப்புத் திட்டங்கள் 3 ஆயிரம் பயனடைந்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 1964ல் அஞ்சலக துணை அலுவலகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகம் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மருத்துவமனை 40வது வார்டில் உள்ள இருதயவியல் துறை புறநோயாளிகள் பிரிவு அருகே செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.

பல்வேறு சிறப்பு திட்டங்கள்

டிஜிட்டல் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டக்கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க், ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அஞ்சலக பொது சேவைகளான பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்தும் வசதி, மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் டிவி ரீசார்ஜ், எல்.ஐ.சி மற்றும் பிற தனியார் இன்சூரன்ஸ் பிரீமியம், இஎம்ஐ செலுத்தும் வசதி, மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்ேவறு அஞ்சலக சேவை வசதிகள் உள்ளன. இவைகளை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆதார் மூலம் பணம் எடுக்கும் வசதி:

தென்மாவட்ட மக்களின் உயர்சிகிச்சை மையாக விளங்கும் மதுரை அரசு மருத்துவமனையில் வெளியூர் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அவசர பணத்தேவைக்கு இந்த அஞ்சலக சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஏஇபிஎஸ் எனப்படும் வசதியால் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும், தங்களுடைய ஆதார் எண் மூலம், வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி உள்ளிட்ட அஞ்சலக சேவைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு கை கொடுத்து உதவியது. இந்த வசதி அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக உள்ளது. ஸ்பீடு போஸ்ட், பதிவு தபால் சேவை, மணியார்டர் வசதியும் உள்ளது.

100க்கும் மேற்பட்ட தபால்கள் பட்டுவாடா

ஒரு போஸ்ட் மாஸ்டர் தலைமையில் உதவிப் பணியாளர் என செயல்படும் இந்த அஞ்சலகம் மூலம் மருத்துவமனை நிர்வாக பிரிவுகள், பலதுறை அலுவலகங்கள், நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் என தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டங்களில் 1,102 பேர், ரெக்கரிங் டெபாசிட் 1,659 பேர், நிரந்தர வைப்பு தொகை கணக்கில் 329 பேர் என மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் டிஜிட்டல் அஞ்சலகம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்களுடன் பொதுமக்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இது குறித்து செவிலியர்கள் சிலர் கூறுகையில், ‘மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் டிஜிட்டல் அஞ்சலகத்தின் சேவைகள் பெரும் உதவியாக உள்ளது.

சிறுசேமிப்பு திட்டங்கள், செல்வமகள் திட்டம் மற்றும் மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் டிவி ரீசார்ஜ் உள்ளிட்ட அஞ்சலக பொது சேவை மூலம் எங்களது அன்றாட தனிப்பட்ட வாழ்க்கை தேவையும் எளிதாக பூர்த்தி செய்யப்படுகிறது. எங்களது பணமும் பாதுகாப்பாக முதலீடு செய்யப்படுகிறது. மேலும் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. பல்வேறு பணிகளை இங்கேயே நிறைவேற்றிக் கொள்வதால், நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கென நேரம் செலவிட ஏதுவாகிறது’’ என்றனர். உள்நோயாளியின் உறவினரான கணேசன் கூறுகையில், ‘எனது அண்ணன் ஒருவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். திடீர் அவசர பணத்தேவை ஏற்பட்டபோது மருத்துவமனை அஞ்சலகம் குறித்து அறிந்து அங்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி மூலம் பயனடைந்தோம். இதனால், பதற்றமும், பணம் இல்லாத அச்சமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. என்னைப்போல் எண்ணற்றவர்களுக்கு பயனளிப்பதாக இந்த வசதி இருக்கிறது’’ என்றார்.

Related Stories: