சுற்றுலா பயணிகளின் சுகாதாரத்துக்காக ஏலகிரி மலை வளைவு சாலைகளில் தூய்மை திட்ட பணி தொடக்கம்

*பணியாளர்கள் குழுக்களாக பிரிந்து  உடனே முடிக்க கலெக்டர் அறிவுரை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே மெகா தூய்மை திட்டப் பணியை ஏலகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி ஊராட்சி ஏலகிரிமலை அடிவாரத்தில் மெகா தூய்மை பணி நேற்று நடைபெற்றது. மெகா தூய்மை திட்ட பணியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார்.

ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜாஜெகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவப்பிரகாசம்,  லட்சுமி செந்தில்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம், ஏலகிரி ஒய்எம்சிஏ பாலியர் பகுதி தலைவர் வில்ஸ்டோ டால்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார். இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 ஏலகிரி மலை அடிவாரத்தில் மெகா தூய்மை திட்டத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா துவக்கி வைத்து பேசியதாவது:-நமது மாவட்டத்தில் சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் மெகா தூய்மை பணி திட்டத்தில் பங்கேற்றுள்ள ஒய்எம்சிஏ நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏலகிரி மலை அடிவாரம் முதல் ஏலகிரி ஊராட்சி வரை 14 வளைவுகளில் தூய்மைப்பணி துவங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்டோர் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு குழு என தீர்மானித்து தூய்மை பணியை பிரித்து செய்தால் பணி சிறப்பாக நடைபெறுவதுடன் எளிதில் தூய்மைப்படுத்த முடியும்.

அவ்வாறு குழுக்களாக பிரித்து முதலில் பணியை முடிக்கும் குழுவினருக்கு தங்கள் ஒய்எம்சிஏ நிர்வாகம் மூலம் பரிசு வழங்கினால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை நாம் ஒன்றாக சேர்ந்து பிரித்துக் கொண்டு ஈடுபட்டால் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண முடியும். அதுபோல் இதுபோன்ற பணியை பிரித்து செய்தால் எளிதில் சிறப்பாக செய்ய முடியும். இதனால் சுற்றுலா தளம் தூய்மை பெறுவதுடன் சுற்றுச்சூழலும், சுகாதாரமும் சுற்றுலா பயணிகளுக்கு சுகமானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.  இதனை அடுத்து 14 கொண்டை ஊசி வளைவு சாலைகளில் தனி தனி குழுவாக பிரித்து தூய்மை பணிக்கு வாகனங்கள் மூலம் பணியை மேற்கொள்ள எம்எல்ஏ க.தேவராஜி வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை அதிகாரிகள் என அனைவரும் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து சாலை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி அவற்றை டிராக்டர் மூலம் கொண்டு சென்று ஏலகிரி மலையில் உள்ள குப்பை சேகரிப்பு நிலையத்தில் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.

 இந்த நிகழ்ச்சியின் போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எ.நந்தினி அருள், எம்.மகேந்திரன், துணைத் தலைவர்கள் அ.திருமால், அரவிந்தன், ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி, மகேஷ் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை  அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: