ஜாதி கொலை தடுக்க டிஐஜி எஸ்பிக்கள் தலைமையில் சிறப்பு படை: தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்

நெல்லை: தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான கொலை குற்றங்கள் மற்றும் வன்முறை  சம்பவங்களை தடுக்க டிஐஜி, எஸ்பிக்கள் தலைமையில் சிறப்புப் படை  அமைக்கப்பட்டுள்ளது என நெல்லையில் நடந்த சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பிக்கள் நெல்லை சரவணன், கன்னியாகுமரி ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனையடுத்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அளித்த பேட்டி: தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான கொலை குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க டிஐஜி மற்றும் எஸ்பிக்கள் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் நடந்த தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி போன்றவைகளில் சிறு பிரச்னைகள் கூட இல்லாமல் சிறப்பாக தென் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜாதி ரீதியிலான பிரச்னைகள் வராமல் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு ரூ.15 கோடி வரை வங்கி கணக்கில் உள்ள பணம் முடக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் சாதி மோதலில் ஈடுபட்டு சிறை சென்று மீண்டும் வந்து குற்றச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊர் கூட்டங்கள் நடத்தி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை வழங்கும் செயல்கள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டாலும் நீதிமன்றம் மூலம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: