பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்ககோரி ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் :  சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தூர் கலெக்டர் அலுவலக முன்பு பிற்படுத்தப்பட்டோர் சங்க மாவட்ட தலைவர் ஞான ஜெகதீஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த சங்கத் தலைவர் சங்கர் ராவ் உத்தரவின் பெயரில் மாநிலம் முழுவதும் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆந்திர மாநிலத்தில் 57 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு கடந்த வாரம் உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 57 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு 27 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல் அனைத்து துறைகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு 50 சதவிகிதம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்த 10 சதவீதத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக ஏற்க வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் தற்போது 25 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு ஏற்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட சங்க துணை தலைவர் நாகராஜ் கவுடு, பொருளாளர் புல்லட் ரவி உள்பட ஏராளமான பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: