நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு


பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக பென் டிரைவில் 3,000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி எம்பியாக இருப்பவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான இளம்பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் திடீரென பரவியது.

தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண், கட்சி மகளிர் அணியினர், உதவி கேட்டு வந்த தொகுதி பெண்கள் என பலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகளை பிரஜ்வல் ரேவண்ணாவே வீடியோ எடுத்திருந்தார். கர்நாடகாவில் முதல் கட்டமாக 14 தொகுதிகளில் தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜ கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தள தலைவரின் பேரனின் ஆபாச வீடியோக்கள் வெளியானது கர்நாடக தேர்தல் களத்தில் பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பாலியல் தொல்லை கொடுத்தாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை செய்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்க மூன்று போலீஸ் அதிகாரிகள் ெகாண்ட சிறப்பு விசாரணை படை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்குள் நேற்றுமுன்தினம் அதிகாலை பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு பிரஜ்வல் தப்பி ஓடிவிட்டார். இதனிடையில் இருவர் மீதான பாலியல் புகார் தொடர்பாக தற்போது பென்டிரைவ் ஒன்று சிக்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. அதில், கடந்த 2019 முதல் 2022 வரை பல பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான 3,000 க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பென்டிரைவ் தொடர்பான தகவல்கள், தேவகவுடா குடும்பத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையில் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாநில சிஐடி போலீஸ் டிஜிபி தலைமையிலான விசாரணை குழுவினர், சமூகவலைதளங்களில் வைலராகி இருக்கும் வீடியோ காட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடியோ காட்சிகளை ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறும்போது, ‘ஹாசன் தொகுதி மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுப்பதற்காக கூடுதல் டிஜிபி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
மேலும் இப்புகார் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள பென்டிரைவ், தடயவியல் ஆய்வு மையதிற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மகளிர் காங்கிரசார் உள்பட பல்வேறு மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

வீடியோ ஆதாரத்துடன் பெண் புகார்
கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்திரிக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் நேற்று புகார் கொடுத்தார். மேலும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் வீடியோ மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மனு ஆகியவற்றை மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு அனுப்பியுள்ள மாநில மகளிர் ஆணைய தலைவர், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிறுத்தியுள்ளார்.

பாஜ மவுனம் ஏன்?
அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கர் கூறும்போது, ‘சில நாட்களாக பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒட்டு மொத்த மாநிலத்தையும் தலைகுனியும் வேலையை செய்திருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், இன்டர்போல் அவருக்கு உதவி செய்து வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரட்டும். இந்த விவகாரம் எங்களுக்கு தெரிந்தவுடன் எஸ்ஐடியை அமைத்தோம். சிறப்பு நீதிமன்றத்தை அமைத்துள்ளோம். நீதி வழங்குவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். ஒரு மக்களவை உறுப்பினர் தனது அதிகார தாகத்தை காட்டி நூற்றுக்கணக்கான பெண்களை வீடியோ எடுத்துள்ளார். பெண்கள் உயிருடன் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு நடந்தாலும் பா.ஜ.வினர் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் என்ற முறையில் கண்டனம் தெரிவிக்கிறேன்,’’ என்றார்.

பாதிக்கப்பட்ட 5 பெண்கள் புகார்
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு படை அமைத்துள்ளது. பெங்களூருவில் இந்த விசாரணை குழுவின் தலைவர் வி.கே.சிங் முன்னிலையில் ஆஜரான ஐந்து பெண்கள் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் பாதிப்புக்குள்ளானது குறித்து விளக்கமளித்து புகார் மனு அளித்தனர். இதை பெற்றுக்கொண்ட எஸ்ஐடி விசாரணையை ெதாடங்கியுள்ளனர்.

அவங்க குடும்பம் வேற, எங்கள் குடும்பம் வேற: குமாரசாமி நழுவல்
முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, ‘பாலியல் புகாரில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்றாகும். இதில் குடும்பத்தை இழுப்பது சரியல்ல. யார் தவறு செய்தார்களோ? அவர் குறித்து மட்டுமே பேச வேண்டும். இந்த விஷயத்தில் என்னுடைய பெயரையோ அல்லது எனது தந்தை தேவகவுடா பெயரை வம்புக்கு இழுப்பது என்ன நியாயம்? அவர்கள் குடும்பம் வேறு.. எங்கள் குடும்பம் வேறு. புகார் குறித்து விசாரணை நடத்த எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை கொடுப்பார்கள். அதில் உண்மை நிரூபிக்கப்பட்டால் தண்டனை உறுதி. இந்த சம்பவம் எனக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சமூகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளது. புகார் தொடர்பான விசாரணை நியாயமாகவும் நீதியாகவும் வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும்’ என்றார்.

 

The post நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: