திருவிடைமருதூர்: குடந்தையில் இன்று அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (40). இந்து முன்னணி மாநகர செயலாளர். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டு வாசலில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த சக்கரபாணி வெளியே ஓடி வந்து பார்த்தார். வாசலில் புகை மண்டலமாக இருந்தது. பெட்ரோல், மண்ணெண்ணெய் வாசனையும் அடித்தது. தகவலறிந்து தஞ்சை எஸ்பி ரவளிப்பிரியா, டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
