கார்த்திகை துவங்கியது... பழநியில் சீசனும் துவங்கியது ஒரு லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம்: தரிசனத்திற்கு 4 மணி நேரம் காத்திருப்பு

பழநி: சீசன் துவங்கிய நிலையில் பழநியில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரி வீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்திற்கு 4 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கார்த்திகை மாதம் துவங்கியதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை துவங்கி உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று பழநி கோயிலுக்கு வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் அடிவார பகுதியில் குவியத் துவங்கினர்.

பக்தர்கள் வந்த வாகனங்கள் கிழக்கு மற்றும் மேற்கு கிரி வீதிகளில் உள்ள சுற்றுலா பஸ் நிலையங்களில் அணிவகுத்து நின்றன. இந்த வாகன நிறுத்தங்கள் முழுதும் நிரம்பியதால் அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை, பூங்கா ரோடு ஓரங்களிலும் சுற்றுலா வாகனங்கள் தேங்கி நின்றன. இதனால் இச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரிவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர்.

அதிகக் கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் தரிசனத்திற்கு சுமார் 4 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதன்படி நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநிக்கு வந்திருந்தனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் இல்லாதிருந்தது. இந்த வருடம் சீசன் துவங்கிய 2 நாட்களிலேயே அதிகளவிலான பக்தர்கள் வரத்துவங்கியுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: