சீர்காழியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து வருகிறது: 13,000 பேர் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர்

சீர்காழி: சீர்காழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து வருவதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதேசமயம் விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர், பெரும்பாலான இடங்களில் இன்னும் வடியவில்லை. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத வகையில் 122 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11ம் தேதி ஒரே நாளில் 44 செ.மீட்டர் மழை பொழிந்தது. இதனால் சீர்காழி பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நின்றது.

மேலும் 34,000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயலில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தற்காலிக  முகாம்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது. மேலும் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சாகுபடி வயல்களில் தேங்கியிருந்த மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் மழையால் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆய்வு செய்து மழை நீரை வடிய வைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்தது. முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 21 முகாம்களில் 3,000 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் வடிய வைக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தாலும் பெரும்பாலான விளை நிலங்களில், தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால் பல விளை நிலங்கள் இன்னும் குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த மழைநீரை முழுவதும் அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: