உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்-கோயில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது

உடுமலை :  பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கோயில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. திருமூர்த்தி மலை மீது அமண லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இதில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள் ஒருங்கே அமைந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மேல் பகுதியில் பஞ்சலிங்க அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் விரும்பி குளிப்பது வழக்கம்.

பருவ மழை காரணமாக அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அணையில் இருந்து உபரியாக வெளியேறும் மழை நீர் வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை சூழ்வது வழக்கம்.நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் எதிரொலியாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வர தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலையில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வரத்து சற்றே குறைந்ததையடுத்து சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பஞ்சலிங்க அருவிக்கு செல்ல 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் பாலாற்றில் கால்களை நனைத்தபடி அமண லிங்கேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் முருகன் பிள்ளையார் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: