போலீசுக்கு தகவல் தருபவர் ஓட ஓட வெட்டிக்கொலை: தெலங்கானாவில் நக்சல்கள் பயங்கரம்

திருமலை: தெலங்கானாவில் போலீசுக்கு ரகசிய தகவல்களை தருபவரை (இன்பார்மர்) நக்சலைட்கள் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்று, மிரட்டல் கடிதத்தையும் வெளியிட்டுள்ளனர். தெலங்கானா - சட்டீஸ்கர் மாநில எல்லையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, 20 நாட்களுக்கு முன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா டிஜிபி மகேந்தர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு நடத்தி, போலீசாரை உஷார்படுத்தினார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் உள்ள கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சபகாகோபால் என்பவரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் 5 மர்ம நபர்கள் திடீரென வந்தனர். அவர்களை பார்த்ததும் சபகாகோபால் வெளியே தப்பி ஓடினார்.

ஆனால், அவரை துரத்தி சென்ற மர்ம நபர்கள், ஓட ஓட சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சபகாகோபால், அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர், ‘லால் சலாம்’ என கோஷங்களை எழுப்பிய அந்த கும்பல், காட்டுக்குள் தப்பிச் சென்றனர். சபகாகோபாலுக்கு 2 மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளனர். போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதால் சபகாகோபால் கொல்லப்பட்டதாக வெங்கடாபுரம் வாஜேடு பகுதி கமிட்டி பெயரில், நக்சல்கள் மிரட்டல் கடிதம் வெளியிட்டு உள்ளனர். அதில், ‘போலீசாருக்கு தகவல் தருபவர்கள், தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பொது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள். தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு என்கவுன்டர் என்ற பெயரில் பலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர், என கூறப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: