இன்றும், நாளையும் பவுர்ணமி கிரிவலம், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை முன்னேற்பாடுகளை: கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது இன்றும், நாளையும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் கோயிலில் நேற்று கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் முன்னேற்பாடுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, ராஜகோபுரம் தொடங்கி, கோயிலின் உட்பிரகாரம் முழுவதும் பார்வையிட்டனர். மேலும், தீபத்திருவிழாவின்போது, பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பதற்கான வழிமுறைகள், 3ம் பிரகாரத்தில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும், தரிசன வரிசையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ேமலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அவ்வாறு, கிரிவலம் செல்லும் பக்தர்களின் பெரும்பாலானோர் கோயிலில் தரிசனம் செய்வதை விரும்புகின்றனர். அதனால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கடந்த மாதம் பவுர்ணமியின்போது 5 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். எனவே, இன்றும், நாளையும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தின்போது, ஒற்றை வரிசையை ஏற்படுத்தி, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தரிசன வரிசையில் எவ்வித குறுக்கீடுகளும் இருக்கக் கூடாது, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தரிசன வரிசையை போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார். அதைத்ெதாடர்ந்து, கோயில் வெளி பிரகாரத்தில் வட ஒத்தைவாடை தெரு, தென் ஒத்தைவாடை தெரு பகுதிகளிலும் கலெக்டர், எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு பக்தர்களுக்கு தேவையான கூடுதல் கழிப்பறைகள், குடிநீர் வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது, கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வவே.கம்பன், டவுன் டிஎஸ்பி குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: