வேட்டவலம், செய்யாறு, சேத்துப்பட்டில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

வேட்டவலம் :  வேட்டவலம், செய்யாறு, சேத்துபட்டில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளில் மறைந்த  முன்னோர்களுக்கு கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

வேட்டவலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளையொட்டி திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வளையம் வைத்தும் அவர்களுக்கு பிடித்த உடைகள், உணவுகளை வைத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் வேட்டவலம் புனித மரியாவின் தூய நெஞ்ச ஆலய பங்கு தந்தை ஆரோக்கியசாமி, மறைந்த ஆத்மாக்கள் இளைப்பாற சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தி கல்லறைகளை புனிதப்படுத்தினார். இதேபோல வேட்டவலம் மறை வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர், ஜமீன்கூடலூர், நா.கெங்கப்பட்டு, சாணிப் பூண்டிஆகிய பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.  

செய்யாறு நகரில் ஆற்காடு சாலையில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி அருட்தந்தை ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

 பின்னர் புனித தேவாலயத்தில் உள்ள  தேவாலய தோட்டத்தில்  கல்லறையில் அருட்தந்தை ஜேம்ஸ் தலைமையில் இறந்த முன்னோர்களுக்கு கல்லறையில் அவரவர் விருப்பப்படி மலர் மாலை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தனர். கல்லறையில் உள்ள ஆத்மாக்களுக்கு சாந்தி செய்யும் விதமாக புனித நீர் தெளித்து வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்று இருந்தனர்.

சேத்துப்பட்டில், போளுர் சாலை நிர்மலா நகரில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் கொட்டும் மழையில் திரளான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளை தூய்மைபடுத்தி மலர்களால் அலங்கரித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி, சாம்பிராணி தூபம் செய்து பிரார்த்தனை செய்தனர். சேத்துப்பட்டு தூய லூர்து அன்னைஆலய பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று தச்சம்பாடி, பத்தியாவரம், அரும்பலூர் ஆகிய பகுதிகளிலும் கல்லறை திருநாள் நடைபெற்றது.

Related Stories: