குடியிருப்புகளை சுற்றி சூழ்ந்திருக்கும் மழைநீர் நந்தியம்பாக்கம், வன்னிப்பாக்கத்தில் எம்எல்ஏ, சப்-கலெக்டர் ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையில், அங்கு குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியிருந்தது. அங்கு புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், மழைநீரை வெளியேற்ற வழியின்றி அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் கலாவதி நாகராஜ் ஆகியோர் நேரில் சென்று, மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

பின்னர் ரயில்வே துறை பொறியாளர் வாசுதேவை சப்-கலெக்டர் தொடர்பு கொண்டு, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரயில்வே மேம்பாலத்தினால் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், கங்கை அம்மன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சப்-கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வில் வருவாய் ஆய்வாளர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை நேற்று மாலை துரை சந்திரசேகர் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீரை ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்ற உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம், துணை தலைவர் சித்ரா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: