பாஜ.வின் கடும் எதிர்ப்பையும் மீறி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து ஆலோசனை: நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.59 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கும் முன் ரூ.74.55 ஆக இருந்தது.  அமெரிக்க கடன் சந்தையில் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக உயர்ந்தப்பட்டிருப்பதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்து ஆலோசிக்க முடிவெடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்குழுவை சேர்ந்த நிஷிகந்த் துபே உள்ளிட்ட பாஜ எம்பி.க்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பது தற்காலிகமானது என்பதால், வர்த்தகத் துறையில் நீண்ட நாட்களாக உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து ஆலோசிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் பங்கேற்கும்படி வர்த்தக அமைப்புகள், துறை சார்ந்த அரசு உயரதிகாரிகள் அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: