கடைகளில் விற்பனை செய்யப்படாததால் ஆன் லைன் மூலம் ஆர்டர் பெற்று காற்றாடி- மாஞ்சா நூல் விற்பனை: 1500 காற்றாடிகள்-600 மாஞ்சா நூல் பண்டல்கள் பறிமுதல்

பெரம்பூர்: சென்னையில் பெரும்பாலான கடைகளில் காற்றாடி, மாஞ்சா நூல் விற்கப்படுவதில்லை. ஆனால் அவற்றை ஆன்லைனில் ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இந்த நிலையில், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு உத்தரவின்படி, வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் தொடர்ந்து ஆன்லைனில் காற்றாடி வாங்குபவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வந்தனர். இதில் முக்கிய நபர் ஒருவர், தொடர்ந்து ஆன்லைனில் காற்றாடி விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார், காற்றாடி வாங்குவதுபோல வாட்ஸ் அப்பில் காற்றாடியை ஆர்டர் செய்தனர். அதாவது 50 காற்றாடிகள் அடங்கிய பண்டல் 600 ரூபாய்க்கு ஆர்டர் செய்தனர். அவற்றை டெலிவரி செய்ய ஒருவர் வந்தபோது அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதற்கு அந்த நபர், ‘’நான் டெலிவரி பாய்தான்.

கொடுக்கும் பார்சலை அவர்கள் சொல்லும் முகவரியில்  கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன்’ என்றார். இதையடுத்து பார்சல் எடுத்த இடம் எந்த இடம் என்பது குறித்து விசாரணை நடத்தி இதன்படி, சென்னை அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி, 1500 காற்றாடிகள், பண்டல், பண்டலாக மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் 600 மாஞ்சா நூல் உருண்டைகள் மற்றும் நான்கு ராட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே போலீசார் வருவது பற்றி அறிந்துகொண்ட மாஞ்சா நூல் தயாரிக்கும் நபரான பார்த்திபன் (29) தப்பிவிட்டார். இதையடுத்து செல்போன் சிக்னல் டவர் உதவியுடன் நேற்று பார்த்திபனை கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டு வாட்ஸ்அப் நம்பர்கள் அமைத்து ஆன்லைன் மூலம் காற்றாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்து வருவது தெரிந்தது.

அம்பேத்கர் கல்லூரி சாலை ஆடுதொட்டி அருகே புளியந்தோப்பு போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சிறுவர்கள் சிலர் காற்றாடி பறக்க விட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து காற்றாடி, மாஞ்சா நூலை பறிமுதல் செய்து காற்றாடி எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டபோது, ‘’ஓட்டேரி டென்சீனர் லைன் சி பிளாக் பகுதியை சேர்ந்த சையத் அஜ்மத் என்பவரிடம் வாங்கினோம்’’ என்றனர். இதையடுத்து அஸ்மத் வீட்டில் இருந்து 162 காற்றாடிகள், 22 மாஞ்சா நூல் பண்டல்களை பறிமுதல் செய்து, சையத் அஜ்மத்தை கைது செய்தனர்.

செம்பியம் உதவி ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில் போலீசார் நேற்று நெய்வயல் சாலையில் ரோந்து சென்றபோது அங்கு காற்றாடி பறக்கவிட்ட சிறுவர்களிடம் இருந்து 6 காற்றாடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘பெரம்பூர் ராகவன் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் (39) என்பவரிடம் காற்றாடிகள் வாங்கியதாக தெரிவித்தனர். அவரது வீட்டில் செம்பியம் போலீசார் சோதனை நடத்தி 50 காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: