திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மீது குவியும் நெல் மோசடி புகார்கள்

*நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல்லுக்கு கூடுதல் விலை தருவதாக தனியார் நிறுவனம் செய்துள்ள மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட நெல் சாகுபடி அதிகம் நடந்தது. குறிப்பாக டீலக்ஸ் பொன்னி எனப்படும் சேம ரகங்கள் அதிகம் சாகுபடி செய்தனர். எனவே, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் நேரடி நெல்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சிலர், நெல்லுக்கு கூடுதல் விலை தருவதாக விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. திருவண்ணாமலை, கலசபாக்கம், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம், பசுமை சங்கம் என்னும் பெயரில் மாநிலம் முழுவதும் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்வதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை இந்த மோசடி நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளனர். ஆரம்பத்தில், விவசாயிகளை நம்ப வைப்பதற்காக கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையை வழங்கியுள்ளனர். எனவே, அடுத்தடுத்து விவசாயிகள் நெல் விற்பனை செய்துள்ளனர்.

ஆனால், அதன்பிறகு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நெல்லுக்கான தொகையை வழங்காமல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அலைக்கழித்துள்ளது. மேலும், அந்த நிறுவனம் வழங்கிய காசோலையயும் மோசடியானது என தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று நாயுடுமங்கலம், துரிஞ்சாபுரம், மல்லவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், திருவண்ணாமலை பகுதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து போலி நிறுவனம் நெல் கொள்முதல் செய்திருக்கிறது. அதன் மூலம், அதிகபட்சம் ரூ.7 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மீது குவியும் நெல் மோசடி புகார்கள் appeared first on Dinakaran.

Related Stories: