குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதை சரி செய்வதாக கூறி மொபைல் செயலி மூலம் ரூ.1 லட்சம் அபேஸ்

மாதவரம்: சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் ஆச்சாரிய கிருஷ்ணகுமார்(38). இவர் தனது வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் பில்டர்களை மாற்ற இணையதளத்தில், அந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் விவரங்களை தேடினார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி எண் கிடைத்தது.

இதையடுத்து, ஆச்சாரிய கிருஷ்ணகுமார் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர், வேறு ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளும்படி கூறினார். அதன்பேரில், ஆச்சாரிய கிருஷ்ணகுமார் குறிப்பிட்ட அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர், ஒரு மொபைல் செயலியை இவருக்கு அனுப்பி வைத்து, அதனை இன்ஸ்டால் செய்து உங்களது புகாரை அதில் பதிவு செய்யுங்கள்.

உடனடியாக உங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். அதன்பேரில், ஆச்சார்ய கிருஷ்ணகுமார் குறிப்பிட்ட அந்த செயலியை பதிவிறக்கம் செய்தார். ஆனால் எந்த ஒரு ஓடிபி எண்ணையும் அவர் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில், ஆச்சார்ய கிருஷ்ணகுமாரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.99,999 ஆன்லைன் மூலமாக எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி திருவிக நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். பொதுவாக சைபர் க்ரைமில் ஈடுபடும் நபர்கள் குறிப்பிட்ட செயலியை பொதுமக்களுக்கு அனுப்பி ஏதாவது ஒரு வகையில் ஓடிபி எண்ணை பெற்று அதன் மூலமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வந்தனர். தற்போது, ஓடிபி எண்ணை கூறாமலேயே செயலியை மட்டும் பதிவிறக்கம் செய்ய வைத்து பணத்தை நூதன முறையில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதை சரி செய்வதாக கூறி மொபைல் செயலி மூலம் ரூ.1 லட்சம் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: