சேலத்தில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற டீலர் உள்பட 5 பேர் கும்பல் கைது

*ஊசி மூலம் ஏற்றச் செய்ததும் அம்பலம்

சேலம் : சேலத்தில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த மொத்த டீலர் உள்பட 5 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இக்கும்பல், ஊசி மூலமும் மருந்தை ஏற்றச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை. இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. அதே போல், ஒருசில மெடிக்கல்களில் வலி நிவாரணி மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

இதனால், சேலம் மாநகர போலீசாருடன் இணைந்து, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான தனிப்படையினர், சேலம் 4 ரோடு பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் செவ்வாய்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22), தட்சணாமூர்த்தி (22), வீரபாண்டி ராஜவீதியைச் சேர்ந்த அர்ஜூனன் (26) எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்பட்ட 900 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த மாத்திரைகள் வியாபார மொத்த டீலர் ரமேஷ் மற்றும் அவரை சார்ந்த 4 பேர், மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்களுக்கு, போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் கும்பலை பிடிக்க, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மாலை, ெமாத்த டீலர் ரமேஷ் (43), மெடிக்கல் ரெப்பான சாமிநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி (58), கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த தரண் (21), அரியானூரில் மெடிக்கல் நடத்தி வரும் மல்லூர் வேங்காம்பட்டியைச் சேர்ந்த நிர்மல்ராஜ் (33), குரங்குச்சாவடியைச் சேர்ந்த கரண் (21) ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வலி நிவாரணி மாத்திரைகளை மொத்த டீலர் ரமேஷ், அதிகளவு கொள்முதல் செய்து, ஒரு மாத்திரை ₹300 என விற்பனை செய்து வந்துள்ளார். அந்த மாத்திரைகளை வாங்கும் இளைஞர்கள், குளுக்கோஸ் சேர்த்து தண்ணீரில் கரைத்து குடித்துள்ளனர். மேலும், சிலர் அந்த மாத்திரை கலந்த நீரை வடிகட்டி, ஊசி மூலம் உடலில் ஏற்றியும் போதையை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது.

மொத்த டீலர் ரமேஷ், மெடிக்கல் ரெப் சுப்பிரமணி ஆகியோருடன் தொடர்பில் இருந்து, மேலும் சிலரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைதான டீலர் ரமேஷ் உள்ளிட்ட 5 பேரையும், சேலம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், 5 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நிலை பாதிக்கும்

வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை போதைக்காக சிலர் உட்கொள்கின்றனர். அதே போல், சிலர் இந்த மாத்திரைகளை கரைத்து, ஊசி மூலமும் உடலில் ஏற்றுவதாக அறிகிறோம். இப்படி செய்வதன் மூலம், அவர்களது உடல் நிலை வெகுவாக பாதிக்கும். உடல் உறுப்புகளை செயலிழக்க செய்து, உயிரிழப்பு ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்பு உண்டாகும். அதனால் வலி நிவாரணி மாத்திரைகளை, போதைக்காக யாரும் பயன்படுத்தக் கூடாது. அது மிகவும் ஆபத்தான செயல்,’ என்றனர்.

The post சேலத்தில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற டீலர் உள்பட 5 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Related Stories: