பென்னாகரம் அருகே வீட்டில் ஸ்கேன் கருவி வைத்து கருவின் பாலினம் கண்டறிந்து சொன்ன கும்பல்

*கையும், களவுமாக சிக்கியது

பென்னாகரம் : பென்னாகரம் அருகே ,சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ஸ்கேன் கருவியை வைத்து, சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொன்ன கும்பல் நேற்று சிக்கியது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் வசிப்பவர் லலிதா(47). இவர் நலப்புறம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து செல்வதாக, சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, நேற்று காலை இணை இயக்குநர் சாந்தி மற்றும் மருத்துவ குழுவினர் நெற்குந்தி முத்தப்பா நகருக்கு சென்று, லலிதாவின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில், அனுமதியின்றி ஸ்கேன் கருவி வைத்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து வந்ததும், தலா ரூ.13,000 வீதம் கட்டணமாக பெற்றுக்கொண்டு 4 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளதையும் கண்டுபிடித்தனர்.

மேலும், இதற்கு புரோக்கராக லலிதா செயல்பட, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்கேன் சென்டரில் பணியாற்றிய முருகேசன் என்பவர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கையும், களவுமாக சிக்கிய லலிதா, முருகேசனிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் வைத்திருந்த ஸ்கேன் கருவி மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் பென்னாகரம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் சிக்கிய முருகேசன், ஏற்கனவே கள்ளக்குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் கைதாகி, 3 மாதமாக சிறையில் இருந்ததாகவும், தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர், லலிதாவுடன் சேர்ந்து அனுமதியின்றி வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மாறு வேடத்தில் சென்ற செவிலியர்

மருத்துவ அதிகாரிகள் மோசடி கும்பலை பிடிக்க, சுகாதார துறையில் பணியாற்றும் பெண் செவிலியரை, மாறு வேடத்தில் கும்பலை அணுக அனுப்பி உள்ளனர். அப்போது அவர் சமையலர் லலிதா, கர்ப்பிணி பெண்களை அணுகி, அவர்களை அழைத்துச்சென்று கருவில் உள்ள குழந்தை பாலினத்தை தெரிவிக்கும் இடைத்தரகராக செயல்பட்டதை கண்டுபிடித்தார். அவரை அணுகிய செவிலியர், நெக்குந்தி முத்தப்பா நகரில் உள்ள லலிதா வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று வீட்டில் 4 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கொண்டு இருந்தனர். இதையடுத்து தயாராக இருந்த சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி மற்றும் குழுவினர், அவர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

The post பென்னாகரம் அருகே வீட்டில் ஸ்கேன் கருவி வைத்து கருவின் பாலினம் கண்டறிந்து சொன்ன கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: