திருச்சி காந்திமார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி-பச்சை நாடான் ₹400, செவ்வாழை ₹600க்கு விற்பனை

திருச்சி : திருச்சி காந்திமார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பச்சை நாடான் ₹400, செவ்வாழை ₹600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி காந்திமார்க்கெட் வாழைக்காய் மண்டியில் சத்தியமங்கலம், தஞ்சாவூர், தேனி, தொட்டியம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் வாழைக்காய் தார்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு சீசனிற்கு தகுந்தாற்போல் சுமார் 10ஆயிரம் வாழைதார்கள் இறக்குமதி செய்யப்பட்டு சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று வாழைக்காய் மண்டிக்கு பச்சை மற்றும் செவ்வாழையின் வரத்து அதிகம் இருந்ததால் விலையும் குறைந்து காணப்பட்டது. பச்சைநாடான் தார் 400 ரூபாய்க்கும், செவ்வாழை தார் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் பச்சைநாடான் தார் 600 ரூபாய்க்கும், செவ்வாழை தார் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதுகுறித்து வாழைத்தார் வியாபாரி ஒருவர் கூறுகையில், ஆந்திராவில் இருந்து பச்சைநாடான் அதிகம் இறக்குமதி செய்யப்படும். பொதுவாக செவ்வாழையில் இரண்டு ரகம் உண்டு, ஒன்று சிவப்பு நிறத்தில் உள்ள வாழை செம்மண்ணில் மட்டுமே வளரும், மற்றொன்று செவ்வாழை ரகம் ஆனால் பச்சையாக இருக்கும் இதை நெய் வாழை என்று சொல்வார்கள். இந்த இரண்டு ரகமும் திருச்சி மண்டிக்கு வரும்.

அது மட்டுமல்லாமல் அதேபோல் பேயம்பழம் ரகம் அதிகமாக பயிரிடப்படுவதில்லை. இது வெயில் காலங்களில் தார் 800 ரூபாய்க்கு விற்பனையாகும். அதேபோல் ஏழரசி என்று சொல்லப்படும் ரகம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பெங்களுருக்கு ஏற்றுமதி செய்யப்படும். அதில் மீதி இருந்தால் மட்டும் தான் திருச்சி மண்டிக்கு வந்து சேரும்.

இது கிலோ கணக்கில் எடைபோட்டு விற்பனை செய்யப்படும். திருச்சிக்கு கழிப்பு செய்யப்பட்டு வரும் தார்கள் வருவதால் அது 200 ரூபாய் வரை விற்கப்படும். மேலும் கற்பூரவள்ளி தார் 500 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. பூவன் தார் 400 ரூபாய் வரை விற்பனையானது. அதோடு மொந்தங்காய், நாட்டுக்காய், போன்றவை இங்கு வருகிறது. தற்போது வாழையில் பச்சைநாடானும், செவ்வாழையும் வரத்து அதிகம் உள்ளது. எனவே விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்.

Related Stories: