தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி: ஏலகிரி மலையில் பஸ் படி, ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்; நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஏலகிரி: சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் தீபாவளி விடுமுறை எதிரொலியாக பேருந்தில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை நீடிக்கிறது. எனவே விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏலகிரி மலை சிறந்து விளங்குகிறது. ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ,மாவட்டங்களில் இருந்தும், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளி தொடர் விடுமுறையின் எதிரொளியாக ஏலகிரி மலையில் இருந்து செல்லும் பேருந்துகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. தீபாவளி தினத்தையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் ஏலகிரி மலையில் உள்ள கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், ஆபத்தை உணராமல் பேருந்தில் படிக்கட்டுகளிலும் பேருந்து மேற்பகுதியிலும் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.

நேற்று தீபாவளி காரணமாக ஏலகிரி மலையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 4.30க்கு செல்லும் மங்களம் பேருந்தில் கூட்ட நெரிசலோடு சென்றனர். மேலும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுதலிலும், பேருந்தின் மேற்பகுதிகளிலும் ஏறி ஆபத்தை உணராத வகையில் பயணம் செய்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், இத்துறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: