களக்காடு அருகே பரபரப்பு; கோயிலில் சாமி சிலை சேதம்: மர்ம நபருக்கு வலை

களக்காடு: களக்காடு அருகே கோயிலில் சாமி சிலையை சேதப் படுத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். சுடலை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியாக கற் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கொடை விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று கோயிலில் உள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. இதையறிந்த ஊர்மக்கள் கோயிலில் திரண்டு சேதமடைந்த சாமி சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோயில் தர்மகர்த்தா மலையடிபுதூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (48) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கோயிலில் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது. அவர் தான் சாமி சிலையை சேதப்படுத்தினாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: