சீனாவை பார்த்து ஏன் இந்த பயம்? மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

புதுடெல்லி: ஐநா மனித உரிமை கவுன்சிலில் சீனாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்த ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் சுயாட்சி பகுதியில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை சீனா தடுப்புக்காவலில் வைத்துள்ளது. உலகளவில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சீனாவின் மீது ஐநா மனித உரிமை கவுன்சிலில் நேற்று முன்தினம் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கனடா, டென்மார்க், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதை கொண்டு வந்தன. 47 உறுப்பினர்களை கொண்ட இந்த கவுன்சிலில், தீர்மானத்திற்கு ஆதரவாக 17 உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து 19 நாடுகளும் வாக்களித்தன. இதனால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்தியா, பிரேசில், உக்ரைன் உள்ளிட்ட 11 நாடுகள்  வாக்களிப்பை புறக்கணித்தன. லடாக் எல்லையில் சீனா அடாவடி செய்து வரும் நிலையில், இந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது சர்ச்சையாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த செயலை, எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘லடாக்கில் சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் பேச அனுமதி இல்லை. ஆனால், சீனா மீதான குற்றச்சாட்டு குறித்த மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணிக்கிறது. ஏன் இந்த வேறுபாடு?’ என்று கேட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘சீனாவை பார்த்து பிரதமர் மோடிக்கு ஏன் இந்த பயம்,’ என்று கேட்கப்பட்டுள்ளது.

Related Stories: