தனியார் செல்போன் நிறுவனத்தில் பிரபல மலையாள நடிகை சிறைவைப்பு: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கச் சென்ற பிரபல மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜனை ஊழியர்கள் சிறை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அன்னா ரேஷ்மா ராஜன். கடந்த 2017ல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய அங்கமாலி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக கொச்சி ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று உள்ளார். அங்கிருந்த ஒரு பெண் ஊழியருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மற்ற ஊழியர்கள் சேர்ந்து நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னா ரேஷ்மா ராஜனை சிறை வைத்தனர்.

அப்போது அந்தப் பெண் ஊழியருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அன்னா ரேஷ்மா ராஜனின் கையில் காயம் ஏற்பட்டது. உடனே தனது தந்தையின் நண்பர்களை அழைத்து விவரத்தை கூறினார். அவர்கள் வந்த பிறகு தான் அன்னா ரேஷ்மா ராஜனை ஊழியர்கள் விடுவித்தனர். இது குறித்து ஆலுவா போலீசில் புகார் செய்தார்.

ஆனால் பின்னர் அந்தப் பெண் ஊழியர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியது: நான் டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக செல்போன் நிறுவனத்திற்கு சென்றேன். அப்போது நடிகை என்பதை அவர்களிடம் கூறவில்லை.

திடீரனெ அங்கிருந்த ஒரு பெண் ஊழியர் தேவையில்லாத காரணத்திற்காக என்னிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அவருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எனது கையில் காயம் ஏற்பட்டது. அப்போது திடீரென அங்கிருந்த ஊழியர்கள் கடையின் ஷட்டரை இழுத்துப் பூட்டி என்ன சிறைவைத்தனர்.

எனது தந்தையின் நண்பர்கள் வந்த பிறகு தான் என்னால் அங்கிருந்து வெளியேற முடிந்தது. இதுகுறித்து நான் போலீசில் புகார் செய்தேன். ஆனால் பின்னர் அந்தப் பெண் ஊழியர் ஸ்டேஷனுக்கு வந்து மன்னிப்பு கேட்டார். இதனால் அவருடைய எதிர்கால நலன் கருதி புகாரை வாபஸ் பெற தீர்மானித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: